×

விமான நிலையத்தில் பரபரப்பு போலந்து நாட்டிலிருந்து பார்சலில் சென்னை வந்த விஷ சிலந்திகள்: புதிய வைரஸை பரப்ப திட்டமா?

சென்னை: போலந்து நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அதில் வந்த சரக்கு பார்சல்களை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ஒரு பார்சல், அருப்புக்கோட்டை முகவரிக்கு வந்திருந்தது. அந்த பார்சலில் சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த பார்சலில் இருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது, அது போலி என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதனுள் கண்ணாடி கூம்புகளில் உயிருடன் கூடிய சிலந்திகள் இருந்தன. மொத்தம் 107 கூம்புகளில் 107 சிலந்திகள் இருந்தன. சுங்கத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனகுற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சிலந்திகளை ஆய்வு செய்தனர்.

அவைகள் அனைத்தும் கொடிய விஷத்தனமையுடவை. மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படுபவை என தெரியவந்தது. மேலும் இவைகளை இந்தியாவிற்குள் அனுமதித்தால், அதனால் வெளிநாட்டு நோய் கிருமிகள் நமது நாட்டில் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சுங்கத்துறையினர் இந்த சிலந்தி பூச்சிகள் அடங்கிய பார்சலை மீண்டும் போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கொடிய விஷம் கொண்ட சிலந்திகளை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது யார், எதற்காக இறக்குமதி செய்தனர், எதாவது நாசவேலைக்கான சதித்திட்டமா என கோணங்களில் விசாரணை நடக்கிறது.  சீனா யுகான் மாநிலத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், விஷ சிலந்திகளை சென்னைக்கு அனுப்பி, அதன் புதிய வைரசை பரப்புவதற்கு சமூக விரோதிகள் திட்டமிட்டனரா என்ற கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai ,Poland , Parcel at the airport in a parcel from Poland Poisonous spiders from Chennai: Is there a plan to spread the new virus?
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...