×

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக அதே சமூகத்தை சேர்ந்த சந்தீப் குமார் என்பவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தமிழகத்தில் சாதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அது இன்னமும் தனது அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனவே, விதிகளை மீறி கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.  நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ரவீந்தர் பட் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகமுத்து ஆஜராகி வாதிட்டார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்படுகிறது. இதே கோரிக்கையுடன் ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குடன் சேர்த்து, இந்த வழக்கும் விசாரிக்கப்படும்,’ என தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,Vanni , Supreme Court refuses to ban 10.5% reservation for Vanni
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...