×

அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியாவில் 4 லட்சம் பேர் பலி: கொரோனா தொற்றிலிருந்து 97% பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3 கோடியே 4 லட்சத்து 58 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 853 பேர் பலியான நிலையில் இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பலி 4 லட்சத்து 312 ஆக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் மட்டுமே 1 லட்சத்து 22 ஆயிரத்து 197 பேர் இறந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பலி 4 லட்சத்தை தாண்டிய 3வது நாடு இந்தியா. அமெரிக்கா 6 லட்சத்து 5 ஆயிரத்து 35 பலியுடன் முதல் இடத்திலும், பிரேசில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 95 பலியுடன் 2வது இடத்திலும் உள்ளன.  தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், பாதிப்பை காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 நாளாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60,237 பேர் குணமடைந்து உள்ளனர். ஒட்டுமொத்த குணமடைந்தோர் விகிதம் 97.01 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 637 ஆக குறைந்துள்ளது.

* ஜூலை வந்து விட்டது; தடுப்பூசி வரவில்லையே ராகுல் கடும் விமர்சனம்
`ஜூலை மாதம் வந்து விட்டது. ஆனால், தடுப்பூசிதான் இன்னும் வரவில்லை,’ என்று தடுப்பூசி தட்டுப்பாட்டை சுட்டிக் காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துதல், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு ஆகிய விவகாரங்களில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `ஜூலை மாதம் வந்துவிட்டது. தடுப்பூசி தான் இன்னும் வரவில்லை. தடுப்பூசிகள் எங்கே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஆணவத்துக்கு மருந்து இல்லை
ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி பற்றிய தகவல்களை ஏற்கனவே நான் வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை என்று தெரியவில்லை? அவர் அந்த புள்ளி விபரங்களை பார்க்கவில்லையா? கொரோனாவுக்கு தடுப்பூசி உண்டு. ஆனால், ஆணவத்துக்கும், அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் தனது தலைமையை மாற்றுவது பற்றி பரிசீலிக்க  வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

* 6 மாநிலங்களுக்கு நிபுணர் குழு
நாட்டின் பல மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்துவது பற்றி இம்மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவும், அறிவுரைகள் வழங்கவும் நிபுணர் குழு அனுப்பப்பட உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

34 கோடி தடுப்பூசி
* ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 7 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் இதுவரையில் 34 கோடியே 76 ஆயிரத்து 232 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
*  கடந்த 24 மணி நேரத்தில் 42 லட்சத்து 64 ஆயிரத்து 123 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
*  கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடத் தொடங்கி நேற்று வரை 167 நாட்கள் கடந்துள்ளது.

Tags : India ,US ,Brazil , 4 lakh people die in India following US, Brazil: 97% recover from corona infection
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...