×

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் 3 மாதத்தில் மீட்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து 3 மாதத்திற்குள் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், நிர்வாக ஆணையர் நாகராஜன், கூடுதல் ஆணையர் பழனிசாமி மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் நிலங்களுக்கான விலை அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை முதலில் தேர்வு செய்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் பட்டா வழங்கியதில் முறைகேடு, ஆக்கிரமிப்பு, போலி பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி துறை அதிகாரிகளிடம் பேசி இருக்கிறோம். பட்டா வழங்குவதில் காலதாமதம் இருக்கக்கூடாது. விரைவாக பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்கியதில் தவறு இருக்கும் என்று சொன்னால், நாம் தவறை திருத்திக்கொடுக்க காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இடங்களை கையப்படுத்த வேண்டும். இந்த 4 மாவட்டங்களில் அரசாங்க பணிகளுக்கு நிறைய திட்டங்கள் இருக்கிறது. அதனால் ஆக்கிரமிப்பு இருக்கிற இடங்களையெல்லாம் உடனடியாக கையகப்படுத்த வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு இடங்களுக்கான குத்தகைதாரர்கள் நிறைய பேர் பணம் கட்டவில்லை. அவர்களுக்கு 15 நாள் நோட்டீஸ் கொடுத்து, அதன்பிறகும் பணம் கொடுக்கவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளோம். நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு உடனடியாக காலி செய்ய வேண்டும்.

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வருவாய் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து 3 மாதத்திற்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.  யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டா மாற்றம், முன்பு பேப்பரில் எழுதி கொடுக்கப்படும். இப்போது, கணினிமயமாக்கப்பட்டுள்ளது. முன்பு, ஒருவர் நிலம் வாங்கி 50 பிளாட் போட்டால் அனைத்தும் ஒருவர் பெயரில் இருக்கும். இப்போது அப்படி இல்லை. யார் யார் நிலத்தை பதிவு செய்கிறார்களோ அவர்கள் பெயருக்கு போய்விடும். இதன்மூலம் உடனடியாக பட்டா கிடைக்கும். தேர்தலில் அறிவித்தபடி, முதியோர் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை முதல்வர்தான் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Kanchi ,Chengalpattu ,Tiruvallur ,Minister KKSSR ,Ramachandran , State-owned occupied lands in Chennai, Kanchi, Chengalpattu and Tiruvallur districts to be reclaimed in 3 months: Minister KKSSR Ramachandran
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்