நடிகை கொடுத்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்: போலீசுக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கருகலைப்பு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை அளித்த புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம்  வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை காவல்துறை கடந்த ஜூன் 20ம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் ஜாமீன் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனிடையே 5 நாட்கள் காவலில் எடுத்து மணிகண்டனை விசாரிக்க கோரி அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையம் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நிராகரித்திருந்தது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று முறையிடப்பட்டது.

மணிகண்டன் தரப்பில், ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே 24 மணி நேரம் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் இல்லை. கைது செய்யப்பட்டு 8 நாட்கள் கழித்து அரசியல் காரணங்களுக்காக போலீசார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசியல் பழிவாங்கும் நோக்கதுடன் இத்தகைய புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மணிகண்டன் புகார்தாரருடன் பேச பயன்படுத்திய செல்போன் மதுரையில் அவரது இல்லத்தில் இருப்பதால் அவரை காவலில் எடுக்க வேண்டிய  அவசியம் உள்ளது என்ற போலீசாரின் வாதத்தை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. எனவே, மணிகண்டனை நாளை மற்றும் நாளை மறுநாள் (இன்றும் நாளையும்) ஆகிய 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதி, காவலில் எடுக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

Related Stories: