×

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணை

சென்னை: நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜ பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நலவழக்கு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, நீட் விவகாரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை தமிழ்நாடு அரசு எடுக்க முடியாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள்  பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதி குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவர்கள் பிரச்னைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி குழுவின் ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசிடமே அளிக்க போகிறார். அதன்பிறகு அரசுதான் முடிவெடுக்க உள்ளதால் இதில் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப் போவதில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு  நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த நிலையில், மூத்த வக்கீல் பி.வில்சன் நேற்று தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதே வழக்கில் திக தலைவர் கி.வீரமணியும் தன்னை இணைத்துக்கொண்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து விளம்பரத்திற்காகவே பாஜக பொருளாளர் இந்த வழக்ைக தொடர்ந்துள்ளார். சட்ட பேரவை பாஜக தலைவர் பேரவையில் நீட் தேர்வை எதிர்ப்போம் என்று கூறியுள்ள நிலையில் அதே கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான மனுதாரர் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அவரின் விளம்பர நோக்கத்தையே காட்டுகிறது. எனவே, நீதிபதி குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

பாஜ கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான மனு தாரர் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அவரின் விளம்பர நோக்கத்தையே காட்டுகிறது.


Tags : Judge ,AK Rajan , Student case seeking dismissal of case against Judge AK Rajan panel: High Court hearing on Monday
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...