×

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழக்கு; மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது. மேலும், ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்ற கடந்த 1992-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் மராத்தா இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. மத்திய அரசு இயற்றிய 102வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு அந்த உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மத்திய அரசு இயற்றிய 102வது சட்டத் திருத்தம் 342(ஏ) பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பிரிவினை சேர்க்க அல்லது நீக்குவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமன்றி மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது.

எனவே, முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்குப் பதிலாக, நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக விசாரணை நடத்த வேண்டும். மறு ஆய்வு மனு மீதான விசாரணை முடிவு வெளிவரும் வரை, முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் நேற்று, உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டத் திருத்த வழக்கில், இந்தாண்டு மே 5ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்கிறது. மறுஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வராது. அதில் கோரப்படும் வரையறைகள் ஏற்கனவே கூறிய தீர்ப்பில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதனால், மறுஆய்வு மனுவை ஏற்பதற்கான முகாந்திரம் இல்லை’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Court , Reservation case for Maratha community; Federal Review Petition Dismissed: Supreme Court Sensational Order
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...