×

வடசேரி பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர இருக்கை வசதிகள்

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் மாநகராட்சி சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து, கடந்த 28ம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகளவில் பயணிகள் பஸ்களில் பயணித்து வருகிறார்கள். முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் 600 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது பயணிகள் சமூக இடைவெளியுடன்  அமரும் வகையில், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக பஸ் நிலைய 2 வது பிளாட்பாரத்தில் புதிய வகையிலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 3 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இருக்கையின் நடுவில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு, 2 பேர் மட்டுமே அமரும் வசதி செய்யப்பட்டு உள்ளது. பரீட்சார்த்த முறையில் 2, 3 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பல தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் கூடுதல் இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே பஸ் நிலையத்தில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

துருப்பிடித்த இருக்கைகள்
நாகர்கோவில் வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் உள்ள இரும்பிலான இருக்கைகள் துருப்பிடித்த நிலையில் பயனற்று கிடக்கிறது. எனவே இந்த இருக்கைகளை மாற்றம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தமில்லாத இருக்கைகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே ஆணையர் ஆஷா அஜித், உடனடியாக இருக்கைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையங்களில் ஆதரவற்றோர் அதிகமாக தங்கி உள்ளனர். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் இது போன்று திறந்த வெளியில் தங்குவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது போன்றவர்களை மீட்டு, அபயகேந்திரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Vadaseri Bus Station , Passenger seating facilities with community space at Vadacherry bus stand
× RELATED மினி பஸ்கள் பிரச்னையில் வடசேரி பஸ் நிலையத்தில் பயணி மீது தாக்குதல்