×

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் 3 குழந்தைகளையும் கொல்ல எலி மருந்து கொடுத்த தந்தை: 6 வயது மகன் பலி; மற்றொரு மகன், மகளுக்கு தீவிர சிகிச்சை

மும்பை: மும்பையில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் 3 குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். இவ்விவகாரத்தில் மூன்று குழந்தையில் ஒருவன் இறந்துவிட்டான். மற்ற இரு குழந்தைகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த மங்கூர்ட் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முகமது அலி நவ்ஷாத்துக்கும், அவரது மனைவி நஜ்மாவுக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கம் போல் கணவர், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டது. அதனால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த தனது குழந்தைகளான 7 வயது மகள் அலினா, 6 வயது மகன் அலிஷன், 2 வயது மகன் அர்மான் ஆகியோருக்கு, ஐஸ்கிரீம்  எனக்கூறி எலி மருந்தை கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட மூன்று குழந்தைகளும் மயக்கமடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், என்ன செய்வதென்றே தெரியாமல் உடனடியாக 3 குழந்தைகளையும் சியோன் மருத்துவமனையில்  சேர்த்தார். பின்னர், தனது மனைவியை தொடர்பு கொண்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது, மூன்று குழந்தைகளும் எலி மருந்தை சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நடந்த விஷயத்தை தனது கணவரிடம் கேட்ட போது, அவர் ஆரம்பத்தில் எலி மருந்தை குழந்தைகள் தவறுதலாக எடுத்து சாப்பிட்டுவிட்டதாக கூறினார். இருந்தும் தன் கணவர் மீது சந்தேகமடைந்த மனைவி, அவர் மீது போலீசில் புகார் அளித்தார். அவர்கள், நவ்ஷாத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மங்கூர்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரகாஷ் சோகுலே கூறுகையில், ‘சிறுவன் அலிஷன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான். சிறுமி அலினா ஓரளவு உடல்நலம் தேறிவருகிறார். மற்றொரு சிறுவன் அர்மான் தீவிர சிகிச்சையில் உள்ளான். குற்றம்சாட்டப்பட்ட தந்தை முகமது அலி நவ்ஷாத்திடம் அவர் மனைவி விசாரித்த போது, ஆரம்பத்தில் எலி மருந்தை குழந்தைகள் தவறுதலாக எடுத்து சாப்பிட்டுவிட்டதாக கூறியுள்றார்.

பின்னர், உறவினர்கள் முன்பாக விசாரணை நடத்திய போது, ஐஸ்கிரீம் எனக்கூறி எலி மருந்தை பேஸ்டாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இனிமேல் குழந்தைகளை மனைவி பார்த்துக் கொள்வார் என்று முடிவு செய்து, அங்கிருந்து தப்பிவிட்டார். இருந்தும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்’ என்றார்.

Tags : Father who gave rat medicine to kill 3 children because wife got angry: 6 year old son killed; Intensive care for another son, daughter
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!