உப்பூர் அனல் மின்நிலையம் செயல்பட தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உப்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தும், மின்நிலையம் செயல்பட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இரு அனல் மின் நிலையங்கள் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க முறையாக ஒப்புதல் வழங்கவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்து, ஆறு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். அதுவரை உப்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இந்திராபானர்ஜி மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.எஸ்.நரசிம்மா, குமணன் ஆகியோர், ‘இவ்விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை முறையான ஆய்வு செய்து முடித்த பின்னரே, அனல் மின் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாதம் ஒன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதித்து, திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால், ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் திட்டத்தை  செயல்படுத்தலாம். எந்தவித தடையும் இல்லை. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருந்தும், மத்திய சுற்றுச்சூழல்த் துறை அமைச்சகம் மற்றும் வழக்கு தொடர்ந்த தனிநபர்கள் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>