×

நிலவொளியில் வரலாறு படைத்த பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

“இஸ்ரோவில் ஆண், பெண் பேதமில்லை. அனைவரது பங்களிப்பும், உழைப்பும் சமமானதே!”
- சிவன் (இஸ்ரோ தலைவர்)

நிலாவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் பெற்றோர்களிடமும், நிலவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களிடமும் இன்றைய குழந்தைகள் திரும்பிக் கேட்கின்றனர், “அந்த நிலவுக்கு எப்படிப் போவது? அங்குப் பாட்டி மட்டும் தனியே என்ன பண்றாங்க? அங்க என்னவெல்லாம் இருக்கு?” என்று கேட்கும் அளவிற்கு அறிவியல் விருட்சமாகியுள்ளது. இதையும் கடந்து “ஏன் தாத்தா வடை சுடக் கூடாதா!” என்ற கேள்வி கேட்கும் பேத்திகளின் காலமாக மாறியிருக்கிறது. அந்த அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கு ஆழமாகக் கால் ஊன்றியுள்ளது.

நாடு முழுவதும் அனைவரது கவனம் பெற்ற நிகழ்வாக, கடந்த 21 ஆம் தேதி மதியம் 2.43 மணி அளவில் கார்மேகங்களுக்கு நடுவே ரம்மியமாக விண்ணில் பாய்ந்ததுடன், வெற்றிகரமாகப் பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான் 2. நிலவின் தெற்கு பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லைப் பதித்திருக்கிறது இஸ்ரோ. அத்துடன் இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலம் என்ற பெருமையையும் சந்திரயான் 2 பெற்றிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவீத பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப்பணிகளில் வெறும் 15 சதவீத பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 20 சதவீத பெண்கள் மட்டுமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் சுமார் 30 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது இஸ்ரோ. இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குனர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த முத்தையா வனிதா பெறுகிறார். ஆரம்பத்தில் திட்ட இயக்குனர் பொறுப்பை வனிதா ஏற்கத் தயங்கினார்.

பின்னர், சந்திரயான் -1 இன் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரையின் ஊக்கத்தின் பேரிலேயே துணிந்து பணியாற்றி தற்போது வெற்றிகண்டிருக்கிறார். ‘‘சிக்கல்களை உடனடியாக கண்டறிந்து சரி செய்யும் திறனுக்குச் சொந்தக்காரர் வனிதா. குழுவை நிர்வகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால் வனிதா சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் சேர்க்கப்பட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.திட்ட இயக்குனர் பதவி என்பது, மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளின் தயாரிப்பு, செயல்பாட்டினை கண்காணிப்பது, விண்கலத்தை இறுதி வடிவமாக்கி அது ஏவப்படும் செயற்பாடுகளுக்கும் பொறுப்பேற்றுள்ள வனிதா, “நான் இங்கு ஜூனியர் பொறியாளராகச் சேர்ந்தேன்.

எனவே ஆய்வகத்தில் பணிபுரிந்திருக்கிறேன், வண்டிகளைச் சோதித்திருக்கிறேன். மென்பொருள் தயாரித்துள்ளேன், வடிவமைத்திருக்கிறேன்.. இவற்றை எல்லாம் கடந்த பிறகே ஒரு நிர்வாக நிலையை அடைந்திருக்கிறேன்” என்று  தனது அனுபவங்களைப் பகிர்கிறார். வனிதா, பல்வேறு விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட விண்கலங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். Astronautical Society of India, இவருக்கு 2006 ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

Nature எனும் சர்வதேச ஜர்னல் வெளியிட்ட 2019 ஆம் ஆண்டின் கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில், வனிதா இடம்பெற்றிருந்தார். இஸ்ரோவில் 32 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட வனிதா, “நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இங்கு ஒன்றாக பணிபுரிகிறோம். எனவே அவர்களது மனநிலையை நன்கு அறிவேன். ஒவ்வொருவரின் பங்கும், பொறுப்பும் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் பெறும் ஆலோசனைகளை மதிக்கிறேன்” என்கிறார். மற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால், இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர்.

சிறு வயதில் வானியல் மீது கொண்ட ஆசையால் விஞ்ஞானத்துக்குள் நுழைந்த ரித்து, 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் விண்வெளி பொறியாளராக தன் பயணத்தை தொடங்கினார். சந்திரயான் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டின் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்ற விருதை ரித்து வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது, செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் திட்டத்திலும் இவரது பங்கு அளப்பரியது. ”விஞ்ஞானத்துக்குள் நுழைய இஸ்ரோவே எனது ஒரே தேர்வாக இருந்தது.

எனது குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்ரோ மற்றும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்தித்தாள் மூலம் சேகரித்து வைப்பேன்” என்று ரித்து தெரிவித்துள்ளார். திட்ட இயக்குனர் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்ல, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணிநேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதோடு மட்டுமின்றி, தேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்ற பொறுப்பும் அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளனர் இவ்விருவரோடு பல பெண்கள்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!