யூரோ கோப்பை கால்பந்து; அரையிறுதிக்கு முன்னேறுமா ஸ்பெயின்?.. காலிறுதியில் ஸ்விட்சர்லாந்துடன் மோதல்

செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று ஸ்பெயின்-ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு துவங்கும் இப்போட்டி ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள கிரெஸ்டோவ்ஸ்கி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற உள்ள 2வது காலிறுதிப் போட்டியில் இத்தாலி-பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

24 நாடுகள் பங்கேற்றுள்ள நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடர், ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. முதல் சுற்று மற்றும் 2ம் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கு ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, செக்.குடியரசு, டென்மார்க் மற்றும் உக்ரைன் ஆகிய 8 நாடுகளின் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இன்று செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் முதலாவது காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து ஸ்விட்சர்லாந்து மோதுகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை. தவிர யூரோ கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முதன்முறையாக தற்போதுதான் ஸ்விட்சர்லாந்து தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவிலான போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளன. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஸ்பெயின் தோல்வியடைந்துள்ளது. ஸ்பெயினின் நட்சத்திர வீரர் செர்ஜியோ ராமோஸ் காயம் காரணமாக நடப்பு தொடரில் ஆடவில்லை.

ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ராமோஸ் அணியில் இருந்தால், எதிரணிக்கு லேசான பயம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஸ்விட்சர்லாந்து வீரர்களில் ஃபார்வர்ட் பொசிஷனில் ஆடும் மாரியோ காவ்ராநோவிச் கவனிக்கப்பட வேண்டியவர். பிரான்சுக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இவர் அடித்த அற்புதமான கோல்தான், ஸ்விட்சர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதி பெற காரணம் என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர அதே போட்டியில் முன்னதாக ஃபார்வர்ட் வீரர் ஹாரிஸ் செஃபரோவிச் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து, பிரான்சை நிலைகுலையச் செய்தார். ஸ்விட்சர்லாந்தை பொறுத்தவரை அந்த அணியின் முன்களம் மிகவும் வலுவாக உள்ளது. ஸ்பெயினின் முன்கள வீரர்களும் இந்த தொடரில் மிகக் கச்சிதமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். குரோஷியாவுக்கு எதிராக நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் ஃபார்வர்ட் வீரர்கள் மொரட்டா, டாரஸ் மற்றும் சராபியா ஆகிய 3 பேருமே தலா ஒரு கோல் அடித்தனர்.

பந்தை கடத்தி கொண்டு வருவது, கடைசி நிமிடத்தில் கோலாக மாற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் இந்த 3 பேருக்கும் இடையேயான புரிதல் இத்தொடரில் கவனிக்கப்படுகிறது. கடந்த கால புள்ளி விவரங்கள் 100 சதவீதம் ஸ்பெயினுக்கு சாதகமாக இருந்தாலும், ஸ்விட்சர்லாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories: