ஒன்றரை ஆண்டாக வெளியேறிய உடைந்த குடிநீர் குழாய் சரிபார்ப்பு-நகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகருக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து முடிகொண்டான் பகுதியிலிருந்து வக்காரமாரி, மணல்மேடு, கிழாய், வில்லியநல்லூர், நிடூர் வழியாக மயிலாடுதுறை நகருக்கு 30 கி.மீ தூரத்திற்கு பைப்லைன் போடப்பட்டு தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் மயிலாடுதுறை நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் குடிநீர்குழாயில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் குழாய் உடைந்த குடிநீர் வெளியேறிவருவதும் அவற்றை அடைப்பதும் நகராட்சி நிர்வாகத்திற்கு வாடிக்கையாக இருந்துவருகிறது. இதுபோன்று நீடூர் அருகே கடுவங்குடி என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டாக தண்ணீர் வெளியேறி வயலுக்கு பாய்ந்து வந்தது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் கடந்த மாதம் 26ம்தேதி அன்று உடைப்பு ஏற்பட்ட இடத்தை புகைப்படத்துடன் தினகரன் நாளிதழில் கோரிக்கை செய்தி பிரசுரிக்கப்பட்டது.இதைக்கண்ட நகராட்சி ஆணையர் சுப்பையா உடனே சரிசெய்ய உத்தரவிட்டார், அதன் அடிப்படையில் கடுவங்குடி பகுதியில் நேற்று முன்தினம் குழாயை சரிசெய்யும் பணி நடைபெற்றது, முதல்நாள் இரவே துவங்கிய பணி நேற்றுமுன்தினம் இரவு வரை நீடித்தது. இரண்டு இடங்களில் இருந்த உடைப்பு சரிசெய்யப்பட்டது.

பைப்லைன் உடைப்பை சரிசெய்யும்போது நிலத்திலிருந்து தண்ணீர் வெளிவந்ததாலும் குழாயில் இருந்த தண்ணீர் வந்துகொண்டே இருந்ததால் அவற்றை நிறுத்தவும், மாற்று இடங்களில் திறந்துவிடவும் காலதாமதமாகியது. தக்கநேரத்தில் குழாய் சரிசெய்யப்பட்டது. கொள்ளிடத்திலிருந்து நிரேற்றப்பட்டு நேற்று காலை மயிலாடுதுறை நகருக்கு வழக்கம்போல் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

கடுவங்குடி பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யக்கோரி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டதற்கும் அந்த உடைப்பை உடனே சரிசெய்த மயிலாடுதுறை நகராட்சிக்கும் கடுவங்குடி பகுதி மக்கள் நன்றி கூறினர்.

Related Stories:

>