×

கல்வராயன்மலையில் பரிகம்-வெள்ளிமலை பாதையில் ₹80 லட்சத்தில் தடுப்பு சுவர் பணிகள் தீவிரம்

சின்னசேலம் : கல்வராயன்மலையில் பரிகம்-வெள்ளிமலை, வெள்ளிமலை-சேராப்பட்டு மலைபாதைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் ரூ.80 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது. கல்வராயன்மலையில் 15 ஊராட்சிகளில் சுமார் 172 சிறிய, பெரிய கிராமங்கள் உள்ளன. இதில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு  சுமார் 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒத்தையடி மலைப்பாதையில் கச்சிராயபாளையம் நடந்து வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். மருத்துவ சிகிச்சை என்றால்கூட மூங்கில் கழியில் தூக்கு கட்டி தூக்கி வந்து சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த கரியாலியின் முயற்சியால் பரிகத்தில் இருந்து வெள்ளிமலை வரை தார்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஆபத்தான இடங்களில் தடுப்பு சுவர் கட்டியும், இரும்பு கம்பியால் தடுப்பு சுவர் அமைத்தும் வந்தனர். தடுப்பு சுவர் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் தடுப்பு சுவர் சேதமடைந்தது.

 இதையடுத்து கள்ளக்குறிச்சி கோட்ட  நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கோட்டப்பொறியாளர் ராஜ்குமார் தலைமையில்,  உதவி கோட்ட பொறியாளர் நீதிதேவன் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் பரிகம்-வெள்ளிமலை, வெள்ளிமலை-சேராப்பட்டு ஆகிய இரண்டு மலைபாதைகளிலும் விபத்துகளை தடுக்கும் வகையில் ரூ.80 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் பழுது நீக்கும் பணி, விடுபட்ட இடங்களில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் இந்த பணியினை அதிகாரிகள் ஆய்வு செய்தும் பணிகள் தரமானதாக இருக்கும்படியும் அறிவுரை கூறி உள்ளனர்.  இந்த பணிகள் முழுமையாக நடந்து முடிந்தால் பரிகத்தில் இருந்து வெள்ளிமலை, சேராப்பட்டு செல்லும் சாலைகளில் விபத்துகள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது என மலைமக்கள் கூறுகின்றனர்.


Tags : Kaligarayanmalai Parigam- ,Vellimalai road , Chinnasalem: In order to prevent accidents on the Parigam-Vellimalai, Vellimalai-Serapattu hill roads in Kalvarayanmalai
× RELATED ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு...