ஸ்ரீநகர் காலனி பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்-அதிகாரிகள் சமரசம்

சித்தூர் : சித்தூர் கிரீம்ஸ் பேட்டை அடுத்த ஸ்ரீநகர் காலனி  பகுதியில் புதியதாக குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தூர் மாநகராட்சி சார்பில் மாநகரத்தில் புதியதாக ஏழு குப்பை கழிவு கிடங்கு அமைக்க ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சித்தூர் கிரீம்ஸ் பேட்டை அடுத்த ஸ்ரீநகர் காலனி  பகுதியில் புதியதாக குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்து அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதி மேடாகா உள்ளதால், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மலைகளிலும், மேடான பகுதிகளிலும் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் மேடான பகுதியில் குப்பை கிடங்கு புதியதாக அமைக்க பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சித்தூர் மாநகரத்தில் 7 வார்டுகளில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை புதியதாக அமைக்கப்பட இருக்கும் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டினால் குப்பை கழிவுகளில் இருந்து வரும் கழிவுநீர் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்படும்.

மேலும், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நோய் தொற்றுக்குள்ளாகும் அபாயம் ஏற்படும். மேலும், குழைந்தைகள் அதிகளவில் உள்ளதால், பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இங்கு குப்பை கிடங்கு அமைப்பதை தவிர்த்து, மற்றொரு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, வேறோரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: