×

கூடலூர் வனப்பகுதியில் நள்ளிரவு ரோந்து சென்றபோது தமிழக வனத்துறை ஊழியர் மீது கேரள வேட்டை கும்பல் தாக்குதல்

கூடலூர் : தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் தமிழக வனத்துறை ஊழியரை துப்பாக்கி மற்றும் அரிவாளால் கேரள வேட்டைக்காரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், கூடலூர் வனச்சரகம் மேகமலை வனச்சரணாலயத்தில் உள்ளது. இங்கு மான், யானை, காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குமுளி பிரிவு வனவர் இளவரசன் தலைமையில், வன காவலர் காஜாமைதீன், வன காப்பாளர்கள் ஜெயக்குமார், மனோஜ்குமார், மகாதேவன் ஆகியோர் செல்லார்கோயில் மெட்டு பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது தமிழக - கேரள எல்லை வனப்பகுதியான மச்சக்கல் காப்புக்காடு - சுரங்கனாறு காப்புக்காடு இணைப்பு பகுதியில் டார்ச் லைட் வெளிச்சம் தெரிந்ததால் அங்கு சென்றனர். அங்கு கேரளாவை சேர்ந்த 7 பேர் கொண்ட வேட்டைக்கும்பல் இருந்தனர். வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது வேட்டைக்கும்பலில் இருந்த ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டார். உடனே வனக்காவலர் காஜாமைதீன் (41) அந்த துப்பாக்கியை பறித்து தரையில் அடித்து உடைத்தார்.

இதையடுத்து வேட்டைக்கும்பலில் இருந்த மற்றொருவர் கையில் வைத்திருந்த அரிவாளால் காஜாமைதீனை நெற்றியில் தாக்கினார். பின்னர் உடைந்த துப்பாக்கி, அரிவாள், கத்தி ஆகியவற்றை போட்டுவிட்டு அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். காயம்பட்ட காஜாமைதீனுக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கம்பம் மேற்கு வனச்சரக வனவர் லியாகத் அலிகான் கொடுத்த புகாரின்பேரில், கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரள வேட்டைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மோப்ப  நாய்களுடன் தடயங்கள் சேகரிப்பு

இதனிடையே நேற்று சம்பவ இடத்தை தமிழக போலீஸ் அதிகாரிகள், கேரள போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து கேரள வனத்துறை சார்பில் பயிற்சியாளர் சேகர், உதவியாளர் அனீஷ் தலைமையில் தேக்கடி புலிகள் சரணாலய  பகுதியில் வனக்குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களான  ஜூலி மற்றும் ஜெனி சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.


Tags : Kerala ,Tamil Wildlife ,Forest of Kudalur , Cuddalore,Forest Employee, Attacked, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...