கோவை பாரதியார் பல்கலை இயற்பியல் துறைத் தலைவர் நியமனத்துக்கு இடைக்கால தடை

சென்னை :  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் புதிய துறைத் தலைவர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், பாரதியார் பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர்  கே.ஸ்ரீநிவாசன் தாக்கல் செய்த மனுவில், நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், பேராசிரியராக பணியாற்றி, பணிமூப்பின் அடிப்படையில்  கடந்த 2016ம் ஆண்டு இயற்பியல் துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்றேன்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 18ம் தேதி, அப்பதவியில் என்னை விட இளையவரான எல்.செந்தில்குமார் என்பவரை பல்கலைக்கழகம் புதிய துறைத் தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.  எனக்கு அறிவியல் துறை தலைவர் என்ற பதவியை வழங்கியுள்ளது. துறைத் தலைவர் பதவி என்பது ஒரு பதவி உயர்வாகும். அந்த பதவிகளில் அனுபவமில்லாத இளையவர்களுக்கு நியமிப்பது விதிகளுக்கு புறம்பானது.

மேலும் இயற்பியல் துறைக்கு புதிய தலைவரை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் விதிகளின்டி  பணிமூப்பு பெற்றவர்களுக்கே அந்த பதவியை வழங்க வேண்டும். எனவே இந்த நியமன உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயற்பியல் துறையின் புதிய துறைத் தலைவர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு தொடர்பாக பல்கலைக்கழகம் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories:

>