×

149 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டது காஷ்மீரில் ‘தர்பார் மாற்றம்’ நடைமுறை முடிவுக்கு வந்தது: குடியிருப்பை காலி செய்ய ஊழியர்களுக்கு உத்தரவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் 149 ஆண்டுகளாக அமலில் இருந்த ‘தர்பார் மாற்றம்’ நடைமுறை முடிவுக்கு வந்து விட்டது. இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் ஜம்மு காஷ்மீரின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, 6  மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக  ஸ்ரீநகரையும் அறிவித்து செயல்பட்டு வந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த வரையில், கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும்,  குளிர் காலத்தில் ஜம்முவிலும் தலைமை செயலகம் செயல்பட்டு  வந்தன. குளிர்காலத்தில் இருந்து தப்பிப்பிதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.  இதற்காக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஆவணங்களும், குறிப்பிட்ட அளவு ஊழியர்களும், அதிகாரிகளும்  ஜம்முவுக்கும், ஸ்ரீநகருக்கும் இடையே வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதனால், இது ‘தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது.

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்து, இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இவற்றுக்கு 2 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்கா, கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இரட்டை தலைநகர நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தார். ‘இப்போது இருப்பது மின்னணு யுகம். அரசு பணிகள் அனைத்தும் மின்னணு மயமாக்கப்பட்டு விட்டது. எனவே, இனிமேல் இரட்டை தலைநகர நடைமுறை தேவையில்லை,’ என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு தலைமை செயலக ஊழியர்கள், அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை 21 நாட்களில் காலி செய்து ஒப்படைக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்மூலம், இரட்டை தலைநகர நடைமுறை முடிவுக்கு உறுதியாகி  விட்டது. இரண்டு தலைமை செயலகங்களிலும் 9 ஆயிரம் ஊழியர்கள் வேலை பணியாற்றுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் டோக்ரா மன்னர் குலால் சிங் ஆட்சி செய்த போது, 1872ல் இருந்து இந்த இரட்டை தலைநகர ஆட்சி முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகும் இது பின்பற்றப்பட்டது. இப்போது, 149 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது.

Tags : Kashmir , Kashmir, ‘Darbar change’, Practical, staff
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!