டிரோன் தாக்குதல் அச்சுறுத்தலை ராணுவம் சந்திக்க தயாராகிறது: தளபதி நரவானே தகவல்

புதுடெல்லி: டிரோன் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறமையை ராணுவம் வளர்த்து வருவதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். ஜம்மு விமானப்படை தளத்தில் டிரோன்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை கலுசாக், ரத்னுசாக் பகுதிகளில் அத்துமீறி பறந்த 2 டிரோன்கள் விரட்டி அடிக்கப்பட்டன. மீண்டும் நேற்று முன்தினமும் ஜம்மு நகரின் மீரான் சாகிப், கஞ்ஜ்வானி பகுதிகளில் 2 டிரோன்கள் சுற்றி திரிந்தன. இவற்றை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அவை அங்கிருந்து திரும்பி சென்றன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ராணுவ தளபதி நரவானே கூறியதாவது: தீவிரவாதிகள் அல்லது அவர்களை ஆதரிக்கும் நாடுகளின் மூலமாக ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான திறமைகளை மேம்படுத்தி வருகிறோம். தீவிரவாதிகள் செயல்பட்டு வரும் பகுதிகளில் டிரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராகி வருகிறது.

கடந்த பிப்ரவரியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிறகு, பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி ஊடுருவவில்லை. இதனால், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதம், ஊடுருவலுக்கு எதிராக இந்தியா கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அங்கு அமைதி நிலவுவதை உறுதிபடுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>