×

மதுரை காப்பகத்தில் மாயமான 14 குழந்தைகள் கதி என்ன? குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கில் 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது: காப்பக உரிமையாளரை தேடி சென்னை வந்தது தனிப்படை

மதுரை: கொரோனாவில் இறந்ததாக நாடகமாடி, காப்பகத்தில் இருந்து 2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 4 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவக்குமார் உள்ளிட்ட 2 பேரை தேடி தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.  மதுரையில் உள்ள ‘‘இதயம் டிரஸ்ட்’’ காப்பகத்தில் சமூக ஆர்வலர் சேர்த்த ஆதரவற்ற பெண் ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவில் இறந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இதுதெரிந்து அசாருதீன், குழந்தையை மீட்டுத்தரும்படி மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் புகார் தெரிவித்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், காப்பக நிர்வாகிகளில் ஒருவரான கலைவாணியை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் ஐஸ்வர்யாவின் ஆண் குழந்தை மாணிக்கம் மதுரை இஸ்மாயில்புரம் 4வது தெருவை சேர்ந்த கண்ணன் - பவானி தம்பதியிடமிருந்து மீட்கப்பட்டது. கண்ணன் மதுரை மேல ஆவணி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த  தம்பதியிடம், ஐஸ்வர்யாவின் குழந்தை மாணிக்கத்தை காப்பக உரிமையாளர்  சிவக்குமார், ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.  இதேபோல் மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த அனீஸ் ராணி - சாதிக் தம்பதியிடம் விற்கப்பட்ட  மற்றொரு 2 வயதான கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதேவியின் பெண் குழந்தை தீபா என்ற தனம்மாளும் மீட்கப்பட்டது.

முறைப்படி தத்து எடுக்காமல் சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கிய கண்ணன் (50), அவரது மனைவி பவானி (45) மற்றும் அனீஸ் ராணி (36), அவரது கணவர் சாதிக் (38), காப்பக ஊழியர் கலைவாணி (36) மற்றும் குழந்தை விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த செல்வி, ராஜா ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். காப்பகத்தில் இருந்த வருகைப்பதிவேட்டில் 16 குழந்தைகளின் பெயர்கள் இருந்தது தெரிந்தது. இந்த பட்டியல்படி இரு குழந்தைகள் மீட்கப்பட்டபோதும், மேலும் 14 குழந்தைகளின் நிலை தெரியவில்லை. இந்த குழந்தைகளும் விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

 மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘‘‘காப்பகத்தை சிவக்குமார் 12 வருடங்களாக பதிவு செய்யாமல் நடத்தி வந்துள்ளார். மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளிடம் மிகுந்த தொடர்பு வைத்துக் கொண்டு, காப்பகத்திற்கென பெரும் தொகையை மதுரை பிரபலங்கள் பலரிடமும் வசூல் செய்துள்ளார். காப்பகத்தில் 134 பேர் இருந்தனர். இதில் 26 முதியவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் பல்வேறு அரசு, தனியார் இல்லங்களிலும்  தங்க வைக்கப்பட்டு, காப்பகம் சீலிடப்பட்டது.  காப்பக உரிமையாளர் சிவக்குமார், நிர்வாகி மதார்ஷா தலைமறைவாகியுள்ளனர். இவர்களை தேடி 2 தனிப்படை சென்னை விரைந்துள்ளன. சிவகுமாரின் செல்போன் சிக்னல் விழுப்புரம் - சென்னை இடையே காட்டுகிறது.

அவ்வப்போது செல்போனில் சிம் கார்டுகளை மாற்றி பயன்படுத்தி வருகிறார். மதார்ஷா செல்போனை அணைத்து வைத்துள்ளார். இருவரும் ஓரிரு நாளில் கைதாவர்’’ என்றார். வக்கீல் முத்துக்குமார் கூறும்போது, ‘‘காப்பக உரிமையாளர் கடந்த ஆட்சியில் அமைச்சர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் நிதி பெற்றுள்ளார். அதற்கு முறையாக கணக்கு கொடுக்கவில்லை. குழந்தை விற்பனை நடந்திருப்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்’’ என்றார்.

விருது வழங்கிய எடப்பாடி பழனிசாமி
காப்பக நிர்வாகி கலைவாணிக்கு மாநில அளவில் சிறந்த சேவைக்கான விருதினை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதற்கும் முன்னதாக இந்த காப்பகத்தில் பணிபுரிந்த அருண்குமார் என்பவரும் மாநில விருது பெற்றுள்ளார். இதுதவிர தலைமறைவான மேலும் ஒரு நிர்வாகி மதார்ஷாவிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று  மாநில விருது வழங்குவதற்காக சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் குழந்தை விற்பனையில் இந்த காப்பகம் சீலிடும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

காது குத்தி பெயர் வைத்து கறிவிருந்து
மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த அனீஸ் ராணி- சாதிக். இவர்கள் சில்வர் பட்டறை வைத்துள்ளனர். இத்தம்பதியிடம்  ரூ. 3 லட்சம் பணம், ஒன்றரை லட்சம்  செலவில் காப்பகத்தில் ஒரு ஷெட் போட்டுத் தரவும் ஒப்புதல் பெற்று 2 வயது குழந்தை தீபாவை விற்றுள்ளனர். குழந்தைக்கு அந்த தம்பதியினர் கடந்த வாரம் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து, காதுகுத்தி, புதிய பெயர் வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சர் கீதா ஜீவன் கடும் எச்சரிக்கை
சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: குழந்தைகள்  விற்பனை விவகாரம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள்  காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்டவைளில் சமூக நல அலுவலர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி 15  நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கள ஆய்வின்போது காப்பகங்கள்  முறையாக அனுமதி பெற்று செயல்படுகிறதா? குழந்தைகள் முதல் பெரியவர் வரை  பாதுகாப்பாக உள்ளனரா என ஆய்வு செய்து  தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கையின்  அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காப்பகங்களில் குழு அமைத்து ஆய்வு
மதுரை கலெக்டர்  அனீஷ் சேகர் கூறும்போது, ‘‘குழு அமைத்து, மாவட்டத்தின் அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விசாரணை   நடந்து வருகிறது. போலி ஆவணம் தயாரித்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள்   உடந்தையாக இருந்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை   எடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை யாரும் வாங்க   வேண்டாம். குழந்தைகளை தத்தெடுக்க சட்டத்தில் இடம் உள்ளது’’   என்றார்.

Tags : Madurai ,Chennai , What is the story of the magical 14 children in the Madurai archive? 7 arrested including 4 women in child trafficking case
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...