எல்.இ.டி வாகனம் மற்றும் நவீன உபகரணங்கள் மூலம் அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக செய்தித்துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன்  தலைமையில், செயலாளர் மகேசன் காசிராஜன்,  இயக்குநர் ஜெயசீலன், கூடுதல் இயக்குனர் அம் பலவாணன் ஆகி யோர்  முன்னிலையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்    தமிழரசு இதழ் சந்தா, வரும் பட்ஜெட் கூட்டத்திற்கான  அறிவிப்புகள், பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள், நினைவிடங்களைச் சிறப்பாகப் பராமரித்தல், நிர்வாகத்தில் மின்ஆளுமை பயன்பாட்டை அதிகரித்தல், மின்னணு விளம்பர வாகனத்தின் பயன்பாடு மற்றும் கொரோனா  விழிப்புணர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இணை  இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களைச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் கொண்டு சேர்த்து, பயன்பெறும் வகையில் தங்களது பணியைத் திறமையாகச் செய்ய வேண்டும். மேலும், அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வெளியிடப்படும் தமிழரசு இதழின் சந்தாக்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

 தமிழறிஞர்களின் பிறந்தநாளைக்  கொண்டாடும் போது, சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் பிரதிநிதிகள், அத்தலைவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஆட்சித்தலைவருடன் கலந்தாலோசித்து முன்கூட்டியே தெரிவித்து, அவ்விழாவினைக் கொண்டாடினால் அத்தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள், பொதுமக்களும் பாராட்டுவார்கள்.  நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்கள் போன்றவற்றைப் பராமரிப்பதற்கு அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அரசு சாரா அமைப்புகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பினைப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்.  நினைவு மண்டபம் மற்றும் மணிமண்டபம் அமைக்கப்பட்டுத் திறப்பு விழா நடைபெறாமல் இருப்பவை குறித்து இயக்குநர் மற்றும் செயலாளர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

 முதல்வர் தலைமையிலான அரசின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை நமது துறையில் உள்ள எல்.இ.டி வாகனம் போன்ற நவீன உபகரணங்கள் மற்றும் நமது அனுபவத்தையும் பயன்படுத்தி, மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். உங்களுக்குக் கிடைத்துள்ள அரசுப் பணி செய்யும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கும் அரசுக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

Related Stories: