தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாகரூ.51 லட்சம் மோசடி ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.51 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் நிம்மகவுடா (53), ரயில்வே ஊழியர். இவர், தனது மகன் ராகுல் நிம்மகவுடாவுக்கு வேலை தேடி வந்தார். இதற்காக, இவர்களது குடும்ப நண்பரான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அழகிரி பாலன் என்பவரை அணுகினார். இவர், மத்திய கமாண்டோ படை வீரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது ஆம்னி பேருந்து வைத்து தொழில் செய்து வருகிறார். அழகிரி பாலன் கமாண்டோ படை வீரராக இருந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் இருந்தவர்.

இவர், தலைமைச் செயலகத்தில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும், தலைமை செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி காலியாக உள்ளது. அந்த வேலை உங்கள் மகனுக்கு வாங்கி தருவாகவும் சீனிவாசன் நிம்மகவுடாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக சீனிவசானிடம் ரூ.51 லட்சம் கேட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்பு பணியில் இருந்ததால் அழகிரி பாலன் பேச்சை நம்பிய சீனிவாசன், 5 தவணையாக ரூ.51 லட்சம் காசோலையாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அழகிரி பாலன் அதன் பிறகு அவர் சீனிவாசன் மகன் ராகுலுக்கு அந்த வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து சீனிவாசன் பல முறை கேட்டும் அவர் முறையாக பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதையடுத்து சீனிவாசன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் சம்பவம் குறித்து முன்னாள் மத்திய கமாண்டோ படை வீரர் அழகிரி பாலன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.  அதில், தலைமை செயலாகத்தில் மக்கள் தொடர்பு துறை அதகிாரி பணி வாங்கி தருவதாகரூ.51 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட அழகிரி பாலனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

₹4.15 கோடி அபேஸ்: 3 பேர் கைது

கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் 12வது தெருவை சேர்ந்த ஆனந்தி உள்பட 85 பேருக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.15 கோடி பெற்று, வேலை வாங்கி தராமல் ஏமாற்றிய  வளசரவாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி, அவரது கணவர் அருண் சாய்ஜி மற்றும் திருவான்மியூர் டாக்டர் வாசுதேவன் நகர் விரிவு பகுதியை சேர்ந்த ரேஷ்மா தாவூத் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி நியமன ஆணைகள் தயாரிக்க பயன்படுத்திய அரசு முத்திரைகள், கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>