பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் மதன். இந்தநிலையில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை சைபர் கிரைமில் பலர் புகார் அளித்தனர்.  இதையடுத்து மதன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 294(பி), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, 67ஏ  ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், தலைமறைவான பப்ஜி மதனை, தருமபுரி காவல்துறையினர் ஜூன் 18ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்தநிலையில் ஜாமீன் கோரி மதன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிரான வழக்கில் காவல்துறை காவலில் என்னை எடுத்து விசாரித்து விட்டது. எனவே  இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் கடந்த 13 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவும், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனு மீது காவல்துறையின் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: