திருமங்கலம் அருகே தெற்காற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தெற்காற்றில் தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என திருமங்கலம், கள்ளிக்குடி பாசன சங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் தெற்காறு ஓடுகிறது. எழுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த ஆற்றின் வழியாக திருமங்கலம் தாலுகாவை சேர்ந்த வடகரை, மைக்குடி கிராமங்களுக்கும், கள்ளிக்குடி தாலுகாவை சேர்ந்த தூம்பகுளம், நெடுங்குளம், கல்லணை, மேலஉப்பிலிகுணடு, கூடக்கோவில், கொக்குளம் பகுதிகளை சேர்ந்த கண்மாய்களுக்கு போய் சேரும். இதன்மூலம் திருமங்கலம் தாலுகாவில் 855 ஹெக்கடர் நிலங்களும், கள்ளிக்குடி தாலுகாவில் சுமார் 950 ஹெக்டர் நிலங்களும் பாசன வசதிகள் பெறுகின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் கடைமடை வரை செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், இந்த தெற்காற்றில் சாத்தங்குடி அருகே ரூ 255.26 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவது என கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் விட்டு பணிகள் துவங்கிய நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. தடுப்பணை பணிகள் துவங்கிய போதே இந்த இரண்டு தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் தடுப்பணை கட்டினால் மேற்படி இரண்டு தாலுக்காகளிலும் உள்ள கண்மாய்கள் வறண்டு போய்விடும் என பொதுப்பணித்துறையினர், திருமங்கலம், கள்ளிக்குடி பிடிஓக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பணை கட்டும் பணி கடந்த சில தினங்களாக மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகா பாசன விவசாய நலச்சங்கதினர் இதுதொடர்பாக நேற்று திருமங்கலம் ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் மாரியப்பன் கூறுகையில், ‘தெற்காற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி இரண்டு தாலுகாவை சேர்ந்த விவசாய நிலங்களை காக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories:

>