×

கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் நிறைவு: ரேசனில் மீண்டும் ரேகை பதிவு அமல் புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணியும் துவங்கியது

சென்னை: கொரோனா நிவாரண நிதியை ரேசன் கார்டுதாரர்களுக்கு விரைந்து வழங்க ரேஷன் கடைகளில் மே மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. மக்கள் கைரேகைகளை பதிவு செய்து பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல் புதிய கார்டு அச்சிடும் பணிகளும் இன்று துவங்கியது. தமிழகத்தில் மொத்தம் 2.9 கோடி ரேசன் கார்டுகள் உள்ளது. ‘’ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’’ திட்டம், 2020 அக்டோபர் 1ல் அமல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழக கார்டுதாரர்கள், கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் மட்டும், பொருட்கள் வாங்குவதை உறுதி செய்ய, கடைகளுக்கு கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் ரேசன் கார்டுக்கு உரியவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டன.
மே மாதம், முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.4,000 வழங்க உத்தரவிட்டார். அதில் முதல் தவணையான 2,000 ரூபாய்  மே மாதமே வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரேசன் கடைகளில் கைரேகை பதிவில் ஏற்கனவே கார்டுதாரர்கள் பலரின் கைரேகைகள் கருவியில் பதிவாகாத பிரச்னையால் காலதாமதம் ஏற்படும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை குறைக்கவும், கொரோனா நிவாரண நிதி வழங்குவதை விரைவுபடுத்தவும் மே மாதம் கைரேகை பதிவு நிறுத்தப்பட்டு கொரேனா நிவாரண நிதி வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது. இதனால் மே இறுதிக்குள் அனைத்து  கார்டுதாரர்களுக்கும் முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது. இதேபோல் ஜூனில் இரண்டாவது தவணையுடன் 14 வகை மளிகை  பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. அப்போதும் கைரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டு ரேஷன் கார்டு மட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு, நிவாரணங்கள் வழங்கப்பட்டன.  ரேசன் கடைகளில் கைரேகை பதிவு நிறுத்தத்தால், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாவது தவணை நிதி வழங்குவது 98.59 சதவீதமும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி 93.99 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று(ஜூலை 1) முதல் மீண்டும் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நடைமுறைக்கு வந்தது.  அதன் மூலம் ரேசன் கார்டுக்கு உரியவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கொரோனா தொற்று பரவல் முழு ஊரடங்கால் களப்பணியாளர்களால் விசாரணைக்கு  செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், கார்டுதாரர்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாலும், புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான மனுக்களை ஒப்புதல்  அளிப்பதற்கான சேவையும், புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிகள் மே இரண்டாவது வாரத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால் புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள், புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணிகள்  மீண்டும் இன்று முதல் துவங்கியது. இதனால் தாலுகா அலுவலகங்கள், இ-சேவை மையங்கள் மூலம் மக்கள் புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.


Tags : Corona Relief Funding ,Razon ,Amal , Corona, the new smart card
× RELATED இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலி