திருவெண்ணெய்நல்லூர் அருகே இன்று பரபரப்பு: மீன் பிடிப்பதில் தகராறு: கிராம மக்கள் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மீன் குத்தகை விடுவதில் தகராறு ஏற்பட்டதால் கிராமமக்கள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம், துலுக்கப்பாளையம் கிராமங்கள் உள்ளது. இந்த இரண்டு கிராம எல்லையை உள்ளடக்கிய ஏரி உள்ளது. குறிப்பாக துலுக்கபாளையம் கிராமத்தில் ஏரியின் பரபளவு அதிகளவில் உள்ளது. தொடர்ந்து இந்த ஏரியில் துலுக்கப்பாளையம் கிராமத்தினர் குத்தகை எடுத்து மீன் பிடித்து வந்தனர். அதுரை 50முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே ஏலம் போன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் அளவில் ஏலம் எடுத்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த துலுக்கப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீன் பிடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து குத்தகை எடுத்தவர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் பல முறை இரண்டு கிராமத்தினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று காலை மீன்வளத்துறை மூலம் போலீஸ் பாதுகாப்புடன் மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீன்பிடிக்க சென்ற போது துலுக்கப்பாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடலூர் - சித்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: