கண்ணூர் அருகே தீவிரவாதியாக மாற்ற கடத்தப்பட்ட மனைவி, மகனை மீட்க வேண்டும்: சிபிஎம் பிரமுகர் உயர்நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: கட்டாய மதமாற்றத்துக்காக கடத்தப்பட்ட தனது மனைவி, மகனை மீட்டுத்தர வேண்டும் என சிபிஎம் பிரமுகர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரிட்டி பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். சிபிஎம் பிரமுகர். டாக்சி ஓட்டி வருகிறார். அவரது மனைவி ஷைனி. தம்பதியின் மகன் ஆகாஷ் (13). தற்போது மலப்புரம் மாவட்டம் தேஞ்சி பகுதியில் வசித்து வருகிறார். கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய பக்கத்து வீட்டில் யூனுஸ், நசீமா, புஷரா ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய வீட்டுக்கு வந்தவர்கள் அவர்களது மதத்துக்கு மாறினால் சொந்தமாக வீடும், ரூ.25 லட்சம் பணமும் தருவதாக கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி வெளியூர் சென்றிருந்தேன். திரும்பி வந்த போது மனைவி, மகனை காணவில்லை. விசாரித்த போது 2 பேரும் மதமாற்றம் செய்யப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நான்அங்கு சென்று அவர்களை விடுவிக்குமாறு கூறினேன். அங்கு இருந்தவர்கள் எனது மனைவி, மகனை அனுப்ப மறுத்துவிட்டனர். 2 பேரையும் வெளிநாட்டுக்கு கடத்தி தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து விடுவார்களோ என நான் அச்சப்படுகிறேன். இந்த சம்பவத்தில் தீவிரவாத குழுவுக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது.

கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஸ்லீப்பர்செல்கள் செயல்பட்டு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள டிஜிபியாக இருந்த லோக்நாத்பெக்ரா கூறியிருந்தார்.  எனவே இது குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க வேண்டும். மனைவி, மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் வினோத்சந்திரன், அனிதா ஆகியோர் கில்பர்ட்டின் மனைவி,  மகனை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட்டனர். இதுதொடர்பாக விளக்கமளிக்க கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

More