சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக மாவட்ட கவுன்சிலர்

திருப்பரங்குன்றம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். சசிகலாவுடன் பேசுபவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் அதிமுகவினர் சசிகலாவிடம் பேசி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மதுரை மாவட்ட அதிமுக கவுன்சிலருமான லட்சுமிபதி ராஜன் சசிகலாவுக்கு ஆதரவாக அவனியாபுரம், சிலைமான், பெருங்குடி, திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அதிர்ச்சியில் உள்ளார்.

இது குறித்து லட்சுமிபதிராஜன் கூறுகையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வளர்த்த கட்சியினை அவர்களுக்கு பின் சசிகலா தான் வழி நடத்தி வந்தார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மற்றும் பலருக்கும் பதவிகளை தந்தவர் சசிகலா. சந்தர்ப்பவாத சுயநலவாதிகள் சசிகலா தலைமையை ஏற்க மறுக்கின்றனர். மேலும் இரட்டை தலைமையினால் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல்களிலும் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. உண்மையான அதிமுகவினரை நீக்க தற்போதைய இரட்டை தலைமைக்கு அதிகாரம் இல்லை,’’ என்றார். சில தினங்களுக்கு முன்பு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக தலைமைக்கு பதிலடி தரும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>