செய்துங்கநல்லூரில் நெல்லை-திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்

செய்துங்கநல்லூர்: நெல்லை- திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. நெல்லை - திருச்செந்தூர் சாலையில் ஆன்மீக தலங்களான திருச்செந்தூர் முருகன் கோவில், நவத்திருப்பதி கோவில்கள், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால்    சாலைகளில் வாகன போக்குவரத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.மேலும், தொழில் ரீதியாக நெல்லை,  கன்னியாகுமரி, தென்காசி  மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கு பல்வேறு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் திருச்செந்தூரில் இருந்து தென்காசி வரை ரூ.637 கோடி  மதிப்பீட்டில்  சென்னை-கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டத்தின் படி ஹைவேஸ்  சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் படி, திருச்செந்தூரில் இருந்து பாளையங்கோட்டை வரை 435 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய சாலை அமைக்கப்படுகிறது. இடைப்பட்ட பகுதியில் ஒரு இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கும் இரண்டு இடங்களில் வாகனத்தில் வந்து செல்பவர்களும்  பக்தர்களும் ஓய்வு எடுத்து செல்லும்   வகையில் கழிப்பறையுடன் கூடிய தங்கும் அறை அமைக்கப்பட உள்ளது.மேலும், நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் உள்ள ஆதிச்சநல்லூர் பாலத்தை விரிவாக்கம் செய்ய தொல்லியல் துறையினர் அனுமதி தராததால் ஆழ்வார்திருநகரியில் இருந்து வைகுண்டம், தோழப்பன்பண்ணை, கொங்கராயகுறிச்சி வழியாக கருங்குளம் வரை புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் 637 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான   தொழில் வழிச் சாலை அமைக்கும் பணினை ஜூன் 14ம் தேதி  திருச்செந்தூரில்   அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து சாலை விரிவாக்கப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்காக சாலை ஓரங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது. இதேபோல் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள விஎம் சத்திரம் பகுதியில் இருந்து செய்துங்கநல்லூர் வரையிலும் சாலைகளில் உள்ள முட்செடிகள் மற்றும் பெரிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியும்  நடக்கிறது. நெல்லை-  திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மற்றும் பாத யாத்திரைகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பழமையான மரங்களை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>