×

சென்சார் கருவியில் மீண்டும் பிரச்னை பாம்பன் பாலத்தில் ரயில் இயக்க தடை

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்திலுள்ள சென்சார் கருவியில் நேற்று மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தடைபட்டது.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையை சீரமைக்கும் பணி நடைபெற்றதால், ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அனைத்து ரயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் பாம்பன் வந்த ரயில்வே பொறியாளர்கள், பாலத்தை ஆய்வு செய்து ரயில்கள் செல்ல அனுமதி அளித்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது.

நேற்று காலை தூக்குப்பால சென்சார் கருவியில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு எச்சரிக்கை மணி அடித்ததால் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே நேற்று காலை 8 மணியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பகல் 12.15 மணிக்கு ராமேஸ்வரம் வரவேண்டிய திருச்சி பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலை 3.05 மணிக்கு பயணிகளுடன் திருச்சி புறப்பட்டு சென்றது.இதுபோல் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மாலை 5.10 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், மண்டபத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து சென்சார் கருவி பழுதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Tags : Bomben Bridge , Problem with sensor device again at Pamban Bridge Train ban
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் பாலத்தில் அடுத்த 67 நாள் ரயில் சேவை கட்