இன்று முதல் ஆர்.டி.ஓ ஆபிசில் '8'போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா?

புதுடெல்லி: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை என்ற புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. ஓட்டுநர் லைசன்ஸ் பெற முதலில் எல்எல்ஆர் பெற்று, வாகனத்தை ஓட்ட பயிற்சி பெற்று, பின்னர் ஆர்டிஓ அலுவலர் முன்பாக டிரைவிங் தேர்வில் வெற்றி பெற வேண்டியது நடைமுறையாக உள்ளது. இதில், புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019ன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி முடிப்பவர்கள், ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும், அவர்களுக்கு நேரடியாக லைசன்ஸ் வழங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. புதிய விதிமுறைப்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்க வேண்டும்.அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும்.

பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும், வாகனங்களை மலை , கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு நில அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.வாகனம் ஓட்டும் சோதனை நடத்தப்பட்டு அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த பயிற்சிகளில் வெற்றி பெறும் ஓட்டுனர்கள் உரிய சான்றிதழுடன் ஆர். டி.ஓ. அலுவலகத்தில் 8 போடாமலேயே லைசென்ஸ் பெறலாம்.

Related Stories: