வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; ரூ.850-ஆக அதிகரிப்பு: நள்ளிரவு முதல் அமல்

சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.825லிருந்து ரூ.850-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூனில் சமையல் சிலிண்டர் விலை ரூ.825-ஆக இருந்த நிலையில் 3 மாதத்துக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டருக்கான விலை ரூ.84.50 அதிகரித்து ரூ.1687.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதித்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும்16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. 16ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் 25 ரூபாய் உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்தது. மார்ச் 1ஆம் தேதியன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 835 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையானது. இதனால் எதிர்கட்சியினர் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தின. இதனையடுத்து மார்ச் 31ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

Related Stories:

>