கடலூர் - புதுவை எல்லையில் 2 ரவுடி கும்பல் பயங்கர மோதல் வெடிகுண்டு வீச்சு; அரிவாள் வெட்டு: 3 பேர் படுகாயம்

கடலூர்: புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி தாடி அய்யனார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சிறையில்  இருந்து வெளியில் வந்து உள்ளார். கடந்த சில நாட்களாக அவரும், அவரது கோஷ்டியும் தமிழக எல்லைப்பகுதியான ரெட்டிச்சாவடி,  கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் தாடி அய்யனார் கோஷ்டிக்கும், கடலூர் அருகே கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த தேவா கோஷ்டிக்கும் இடையே நேற்று அதிகாலை பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவரிடம் ஒன்றாக செயல்பட்டு வந்த நிலையில், தேவா உறவினரை அய்யனார் தரப்பு தாக்கியதால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தாடி அய்யனார் கும்பல் கீழ் குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் மது அருந்துவது வழக்கம். நேற்று அதிகாலை அய்யனாரை தாக்க, தேவா கோஷ்டி நாட்டு வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அய்யனார் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தேவா படுகாயமடைந்தார். அவரது கை விரல்கள் துண்டானது. மோதலில் காயமடைந்த தேவா, அய்யனார், வேல்முருகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More