×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கிண்டியில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், முதன்மை செயலாளர் தீரஜ்குமார்  மற்றும்  அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: சாலை மற்றும் பாலங்களை கட்டும் பொழுது சில இடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன,  பணி செய்யும் பொழுது ஏற்படும் சங்கடங்கள் என்ன, என்பதை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம்.  

மணல் கிடைப்பதில்லை, எம்.சாண்ட் பயன்படுத்த வேண்டும் என்றால் திட்ட மதிப்பீட்டை திருத்த வேண்டும்.  சென்னையில் நெடுஞ்சாலை பணிகளை செய்ய காவல்துறையின் அனுமதி பெற வேண்டும். காலதாமதத்தை தவிர்க்க துறையே அனுமதி பெற்று தர வேண்டும். தார் மற்றும் சிமென்ட் விலையேற்றம், பணி துவங்கும்போது ஒரு விலை, முடியும்போது ஒரு விலை,  இடையே உள்ள வித்தியாசத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை. கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வருவதால் போக்குவரத்து செலவு கூடுகிறது. டெல்டா மாவட்டத்தில் பணிக்கு மதிப்பீடு தயார் செய்யும் முன்பு கண்காணிப்பு பொறியாளர் நிலையில் கள ஆய்வு செய்து பின்னர் மதிப்பீடு தயாரிக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துவதில் காலதாமத்தை போக்க நெடுஞ்சாலை துறைக்கு தனியாக மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவோம். ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பாக ஏற்கனவே துறை அலுவலர்கள் அறிக்கை தயார் செய்து தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக விரைவில் முதல்வரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். கிராம பகுதிகளில் சாலைகளை செம்மைபடுத்திடும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 10 ஆயிரம் கி.மீ ஊரகச் சாலைகளை ஒப்படைக்க கோரியுள்ளோம். சாலைகளை ஒப்படைத்ததும் அதற்கு மதிப்பீடுகள் தயார் செய்து தரமான சாலைகள் போடப்படும்.  சென்னை - சேலம் 8 வழிச்சாலை குறித்து அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

Tags : Chennai Corporation ,Minister ,E.V.Velu , Soon decision will be taken to close the toll booths under the Chennai Corporation: Minister E.V.Velu
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...