×

கூடுதல் விலைக்கு வாங்கி சட்ட விரோத பணப் பரிமாற்றம் கோவாக்சின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல்: பிரேசில் அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பிரேசிலியா: சிங்கப்பூர் நிறுவனத்திற்கு பணப் பரிமாற்றம் செய்து ரூ.2,379.2 கோடி ‘கோவாக்சின்’ தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் செய்துள்ளதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் தடுப்பூசியை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. அதன்படி, ஐதராபாத்தை சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இதை, ஒரு தடுப்பூசியின் விலை ரூ.1,115.25 என்ற அடிப்படையில் ரூ.2379.2 கோடிக்கு பிரேசில் அரசு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, இதற்காக, சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ரூ.334.57 கோடி  முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘இந்திய நிறுவனத்திடம் இருந்து மருந்து வாங்கினால், அந்நிறுவனத்திற்கு நேரடியாக பணம் செலுத்தாமல் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஏன் முன்பணம் செலுத்த வேண்டும்? ஒரு தடுப்பூசியின் விலை  ஏன் மிக அதிக விலைக்கு வாங்கப்படுகிறது? இவ்வளவு விலை கொடுத்து மற்ற நாடுகள் வாங்குவதில்லை. தடுப்பூசி வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது,’ என பிரேசில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இதுதொடர்பாக, எதிர்கட்சிகள் 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சபாநாயகர் ஆர்தர் லிராவிடம் மனுவாக அளித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மார்செலோ கிரோகா, ‘ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

கொரோனா நேரத்தில் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மாத்திரையை, தொற்றுக்கு எதிராக செயல்படாது என தெரிந்தும் வலுக்கட்டாயமாக அனைவருக்கும் வழங்கியதாக அதிபர் போல்சனாரோ மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள்  உள்ளன. இதேபோல், கொரோனா பலி எண்ணிக்கையை போலியாக உயர்த்தி காட்டியதாகவும்  குற்றச்சாட்டு உள்ளது. எனவே, ‘அதிபரே பதவி விலகு’ என்ற கோஷத்துடன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, தடுப்பூசி ஊழல் புகாரில் சிக்கி உள்ளதால், அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

* முன்பணம் வாங்கவில்லை பாரத் பயோடெக் விளக்கம்
பிரேசில் நாட்டு எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டை ‘கோவாக்சின்’ சப்ளை செய்யும் பாரத் பயோடெக் நிறுவனமும் மறுத்துள்ளது. ‘பிரேசிலிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்காக இதுவரை எங்கள் நிறுவனம் முன்பணம் எதையும் வாங்கவில்லை. இந்த கொள்முதல் விவகாரத்தில் எந்த  முறைகேடும் நடக்கவில்லை. இ-மெயில் மூலம் என்ன அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதோ, அதன்படிதான் எல்லாம் நடந்துள்ளது,’ என அது கூறி உள்ளது. ஆனால், ‘ஏன் சிங்கப்பூர்  நிறுவனம் மூலமாக பணப்பரிமாற்றம் நடந்தது’ என்ற கேள்விக்கு, அந்நிறுவனத்தின் பிரதிநிதி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

* ஒப்பந்தம் ரத்து
பிரேசில் சுகாதார அமைச்சர் மார்செலோ கிரோகா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு இதுவரை எந்த பணமும் செலுத்தவில்லை. சி.ஜி.யுவின் முதற்கட்ட ஆய்வின்படி, ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டாலும் கூட, இந்த தடுப்பூசி ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது,’ என்றார்.

Tags : Kovacs , Brazilian president charged with bribery over coveted contract
× RELATED உலக சுகாதார அமைப்பிடம் 5 கோடி...