சன் டி.வி. நிதி உதவியால் நிறைவேற்றப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்பு

சன் டி.வி. நிதி உதவியால் சென்னை தண்டையார்பேட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் நிறைவேற்றப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தண்டையார்பேட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக, வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்புக்கு 2019-ம் ஆண்டு சன் டி.வி. ஒரு கோடியே 57 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியது.

இந்த நிதி உதவியின் மூலம் அந்தப் பகுதியில் 9 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 6 பொதுக் கழிப்பிடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவற்றை சன் டி.வி. நெட்வொர்க் சார்பில் காவேரி கலாநிதி மாறன் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சோனி தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சத்தியவாணி முத்து நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சன் டி.வி. அளித்த நிதி உதவி மூலம் வேர்ல்டு விஷன் இந்தியா மேற்கொண்டுள்ள பணிகளுக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். கூவம் நதியை ஒட்டி இப்பகுதி அமைந்துள்ளதால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு, மருத்துவ ஆலோசனை ஆகியவை அளிக்கப்படுவதுடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

தங்கள் பகுதியின் மேம்பாட்டுக்காக சன் டி.வி. ஆற்றி வரும் பணிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>