சிஏ தேர்வர்களுக்கு புதிய சலுகை குடும்பத்தினருக்கு தொற்று இருந்தாலும் தேர்வில் விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தாலும், சிஏ தேர்வு எழுதுவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு நாடு முழுவதும் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் சில மாற்றங்கள் கோரி பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் இறுதி கட்ட விசாரணையில், கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்கள், தொற்றிலிருந்து சமீபத்தில் குணமடைந்தவர்கள், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெறலாம் என இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் கூறியது.

இந்த வழக்கில் நீதிபதி கான்வீல்கர் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு வருமாறு:  தேர்வு எழுதுபவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவரது குடும்பத்தினர் யாரேனும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதனால் அவரால் தேர்வு எழுத முடியாமல் அல்லது தயாராக முடியாத நிலையில் அவர்களுக்கு விலக்கு அளித்து, மறுவாய்ப்பும் வழங்க வேண்டும். அந்த மாணவர்க்ளை அடுத்த தேர்வில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தேர்விலிருந்து விலகிக் கொள்ள உரிய மருத்துவ சான்றிதழ் வழங்கினால் போதுமானது. கொரோனா சான்றிதழ் அவசியமில்லை. தேர்வு மையங்கள் மாறுதலுக்கு உண்டானவர்களுக்கு, அவர்களின் தேர்வு மையம் அதே நகரத்தில் இருந்தாலும், அவர்களுக்கும் தேர்விலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

Related Stories: