விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் கார்னெட்: ஆண்ட்ரீஸ்கு அதிர்ச்சி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் தகுதி பெற்றார். முதல் சுற்றில் 5வது ரேங்க் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் (21 வயது, கனடா) நேற்று மோதிய கார்னெட் (31 வயது, 58வது ரேங்க்), அதிரடியாக விளையாடி பியான்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கமிலா ஜார்ஜி (இத்தாலி), கிறிஸ்டினா பிளிஸ்கோவா (செக்.), செவஸ்டோவா (லாட்வியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

செரீனா காயம்: விம்பிள்டன் ஓபனில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக, முதல் சுற்றில் இருந்து பாதியில் வெளியேறினார். பெலாரஸ் வீராங்கனை சாஸ்னோவிச்சுடன் (100வது ரேங்க்) மோதிய செரீனா 3-3 என்ற கேம் கணக்கில் இருந்தபோது தடுமாறி விழந்தார். பின்னர், கண்ணீருடன் எழுந்த அவர் ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். செரீனா முதல் முறையாக விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றில் வெளியேறி உள்ளார். கடந்த 1998ம் ஆண்டு முதல் இதுவரை 20 முறை விம்பிள்டன் தொடரில் விளையாடி உள்ளார். அதில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றதுடன், 4 முறை இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளார். தவிர ஒரு முறை அரையிறுதி, 2முறை காலிறுதியிலும் ஆடியுள்ளார். மேலும் 3முறை 3வது சுற்றிலும், 2 முறை காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றிலும் விளையாடி உள்ளார்.

Related Stories: