×

யூரோ கோப்பை கால்பந்து காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: 55 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்

கிளாஸ்கோ: யூரோ கோப்பை கால்பந்து தொடரில், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கால் இறுதிக்கு முன்னேறியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் களம் கண்டன. யூரோ கோப்பை தொடர்களில் இருந்து பலமுறை வெளியேறக் காரணமாக  இருந்த ஜெர்மனியை  இந்த முறையாவது வீழ்த்த வேண்டும் என்று இங்கிலாந்து முனைப்பு காட்டியது. அதிரடியாக விளையாடிய ஜெர்மனி ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும், இங்கிலாந்து தற்காப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியாமல் திணறியது.

இதனால் இடைவேளை வரை கோல் ஏதும் விழாமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியிலும் இதே நிலை நீடித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவார ஆதரவால் உற்சாகமடைந்த இங்கிலாந்து வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதன் பலனாக, ரஹீம் ஸ்டெர்லிங் 75வது நிமிடத்திலும், ஹாரி கேன் 86வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். பதில் கோல் அடிக்க ஜெர்மனி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நட்சத்திர வீரர் முல்லர் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை வீணடித்தது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 4வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி 55 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு யூரோ கோப்பையில் ஜெர்மனி அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் உற்சாகம்: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ  நகரில்  நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன் - உக்ரைன் அணிகள் மோதின. யூரோ தொடரில் 2வது முறையாக காலிறுதிக்குள் நுழைய ஸ்வீடனும், முதல்முறையாக  காலிறுதியை எட்ட உக்ரைனும் உத்வேகம் காட்டின. உக்ரைனின் ஒலெக்சாண்டர் சின்செங்கோ 27வது நிமிடத்திலும், ஸ்வீடனின் எமில் பார்ஸ்பெர்க்  43வது நிமிடத்திலும் கோலடித்தனர். இடைவேளையின்போது 1-1 என சமநிலை வகித்த அணிகளால், 2வது பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்ததை அடுத்து, கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது.

அனல் பறந்த அந்த 30 நிமிடங்களிலும் யாரும் கோல்  போடவில்லை. காயம் உள்ளிட்ட காரணங்களால் இடை நிறுத்தப்பட்டதை ஈடுகட்ட,   கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் ஆர்டெம் டவ்பிக் அபாரமாக கோலடிக்க உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று முதல் முறையாக  காலிறுதிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறும் காலிறுதியில் சுவிஸ் - ஸ்பெயின், பெல்ஜியம் - இத்தாலி அணிகளும், சனிக்கிழமை செக் குடியரசு - டென்மார்க், உக்ரைன் - இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.


Tags : England ,Euro Cup ,Germany , England advance to Euro Cup quarterfinals: Stunning defeat of Germany after 55 years
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...