×

ஆண்டு முழுவதும் பல கி.மீ தூரம் காலியாகவே இயக்கம்: நள்ளிரவில் இயக்கப்படும் திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்..! பயணிகள் அதிருப்தி

நாகர்கோவில்: திருவனந்தபுரம் கோட்டம் ஒரு சில ரயில்களை இயக்குவதில் மாற்றம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரத்திலிருந்து நடு இரவு ஒரு மணிக்கு புறப்பட்டு வந்த திருவனந்தபுரம் - நிசாமுதீன் வாராந்திர ரயில் (எண்: 22655-22656) நடு இரவு புறப்படுவதால் எந்த ஒரு பயணிகளும் பயணம் செய்யாமல் காலியாகவே எர்ணாகுளம் வரை இயக்கப்பட்டு ரயில்வே துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் இந்த ரயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து இவ்வாறு நடு இரவு ரயில் இயக்கப்பட்டு வந்ததை போன்று திருநெல்வேலியிருந்து சனிகிழமை நடு இரவு 1:15 மணிக்கு பிலாஸ்பூர் ரயில் புறப்பட்டு நாகர்கோவிலுக்கு இரவு 2:30 மணிக்கு வந்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி, ரெனிகுண்டா, விஜயவாடா வழியாக பிலாஸ்பூர்க்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில நாட்களில் எந்த ஓரு பயணியுமின்றி காலியாக இந்த ரயிலில் இஞ்சின் ஓட்டுனர், பயணசீட்டு பரிசோதகர், கார்டு மட்டுமே திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம் வரை பயணம் செய்வர். ஒரு சில பயணிகள் கொல்லம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர் போன்ற இடங்களுக்கு பயணம் செய்ய விரும்பினாலும் இந்த ரயிலில் தனியாக பயணம் செய்ய விரும்பாத காரணத்தால் பாதுகாப்பு கருதி எந்த ஓரு பயணியும் பயணம் செய்வது கிடையாது. இதனால் இந்த ரயில் ஆண்டு முழுவதும் காலியாகவே இயக்கப்படுகின்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரிலிருந்து கேரளாவுக்கு ரயில் இயக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கேரளாவை சார்ந்த பயணிகள் ரயில்வே துறைக்கு பல்வேறு கட்டமாக கோரிக்கை வைத்து பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்தார்கள். ரயில்வே வாரியத்திலிருந்து திருவனந்தபுரம் - பிலாஸ்பூர் ரயில் இயக்க தெற்கு ரயில்வே மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு நெருக்கடி வந்தது. திருவனந்தபுரம் கோட்டம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சுவேளி ரயில் நிலைய முனைய வசதிகள் நெருக்கடியாக இருப்பதால் இந்த ரயிலை திருவனந்தபுரத்திலிருந்து இயக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிக்கும் மூன்று பிட்லைன்கள் தயார்நிலையில் இருந்தன. உடனடியாக ரயில்வே அதிகாரிகள் இந்த ரயிலை திருநெல்வேலியிருந்து இயக்க ஏற்பாடு செய்து ரயிலும் அறிவித்தனர். திருநெல்வேலி மாவட்ட பயணிகளும் இந்த ரயிலில் உள்ள சூட்சமம் தெரியாமல் மகிழ்ச்சி பொங்கினர். தமிழக ரயில் நிலையங்களைக் கேரள பயணிகளின் வசதிக்கான ரயில்களை நிறுத்தி பராமரிக்கவும், கழுகிவிடும் இடங்களாக ரயில்வேதுறை மாற்றியுள்ளது என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பராமரிப்புக்காக வேண்டி திருநெல்வேலிக்கு தள்ளிவிட்ட ரயில் ஆகும். திருநெல்வேலியிருந்து பிலாஸ்பூர் செல்ல விரும்பினால் மதுரை, திண்டுக்கல், வழியாக வெகு குறைந்த வழித்தடம் வழியாக செல்ல முடியும். ஆனால் கேரளா வழியாக செல்கின்ற காரணத்தால் பயணிகளுக்கு தேவையில்லாமல் அதிக பயணநேரம், அதிக கட்டணம் ஆகின்றது. எனவே நள்ளிரவு நேரத்தில் இயக்கப்படும் திருநெல்வேலி - பிலாஸ்பூர் ரயில் கொச்சுவேலி உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tirunelvelvelveli ,Bilaspur Express , Tirunelveli-Bilaspur Express will run at midnight all year round. Passenger dissatisfaction
× RELATED திருநெல்வேலி மாவட்டம்...