×

மேற்கு வங்கத்தில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, அம்மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி. கொல்கத்தாவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதில் மிமி உள்ளிட்ட பலருக்கு வயிற்று வலி, ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து நடந்த விசாரணையில் கொரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்றும், அந்த மருந்தும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. தேபஞ்சன் தேவ் என்ற பெயரில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட நபர், இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்து மோசடி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற பெயரில் அவர் செலுத்தியது வெறும் எதிர்ப்பாற்றல் தரும் மருந்துகள் மட்டுமே என்று கண்டறியப்பட்டதை அடுத்து, தேபஞ்சன் தேவ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். போலி தடுப்பூசி போட்டு அவர்கள் ரூ.1 கோடி வரை பணம் வசூலித்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்குக் கடந்த 25-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்தக் கடிதத்தைக் குறிப்பிட்டு, மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் ஹரி கிருஷ்ண த்ரிவேதிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கொல்கத்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதி இல்லாத நபர்கள் மூலம் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதாக வெளியான விவகாரம் குறித்த உண்மை அறிக்கை கோரப்படுகிறது. குறிப்பாக கொல்கத்தாவின் காஸ்பா பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறவில்லை. அனைத்துத் தடுப்பூசி முகாம்களும் கோவின் தளத்துடன் இணைக்கப்பட்டு, தடுப்பூசி விவரங்கள் அதில் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவிலோ அல்லது நேரடியாகவோ விநியோகிக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளை விநியோகிக்காத முகாம்கள், போலி தடுப்பூசி முகாம்களாக கருதப்பட்டு, அங்கு செலுத்தப்பட்ட ஊசிகளின் விவரங்கள் கேள்விக்குள்ளாகும் சூழல் ஏற்படும். எனவே இதுகுறித்து உடனடியாக விசாரித்து, தேவைப்பட்டால் கண்டிப்பான, தகுந்த மற்றும் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுகுறித்து அடுத்த இரண்டு நாட்களில் உண்மை அறிக்கையை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Tags : West Bank , corona
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...