×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு ,எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தயார் : மத்திய அரசு

மதுரை : மதுரை எய்ம்ஸ்-க்காக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்கினால் உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது. மறு ஆண்டு பிரமர் மோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. மதுரையுடன் அறிவிக்கப்பட்ட 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலுங்கான மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெறுவதுடன், இந்த மாநிலங்களில் வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம், அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநிலங்களில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கவில்லை. எனவே, மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி, வெளிப்புற சிகிச்சை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முந்தைய விசாரணையின் போது, வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை எயம்ஸுக்காக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு தயாராக உள்ளோம் என்று தெரிவித்த மத்திய அரசு, இது தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையையும் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்படவில்லை என்றும் வழக்கின் அடிப்படையிலேயே பதில் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசு எய்ம்ஸுக்கான திட்ட வரைவு எதையும் வழங்கவில்லை என்றும் தமிழக அரசின் நிலையை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து தமிழக அரசின் நிலையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Tags : Madurai AIIMS Hospital Outpatient Unit ,MBBS ,Government , மதுரை எய்ம்ஸ்
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...