14வது மாடியில் இருந்து குதித்து மும்பை மாடல் அழகி தற்கொலை: சினிமா வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி

நொய்டா: நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து மாடல் அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து குதித்து, மும்பையை சேர்ந்த மாடல் அழகி பாவனா கவுதம் (24) தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், பாவனா கவுதமின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் டிசிபி ஹரிஷ் சந்தர் கூறுகையில், ‘நொய்டாவின் பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து குதித்து பாவனா கவுதம் தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில், மும்பையில் இருந்து தனது காதலனுடன் நொய்டா வந்த பாவனா, 4வது மாடியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்தார். இங்கு, அவரது காதலனுக்கு விருந்து வைத்தார். இதையறிந்த அவரது தாய், காதலனை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காக பாவனாவை திட்டியுள்ளார்.

இதற்கிடையே, அவரது காதலன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். மனமுடைந்த நிலையில் இருந்த பாவனா, திடீரென 14வது மாடியின் பால்கனிக்கு சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு செய்துகொண்டார். இந்த வழக்கில், இதுவரை தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.  ஆனால், கொரோனா ஊரடங்கால் அவருக்கு மும்பையில் வேலை ஏதும் கிடைக்கவில்லை. அதனால், அவர் விரக்தியடைந்த நிலையில் நொய்டா வந்ததாகவும் கூறப்படுகிறது. மும்பையில் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பதற்காக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆண் நண்பருடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே, பாவனா கவுதம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். இச்சம்பவத்தில், தேவைப்பட்டால் மும்பையில் வசிக்கும், அவரது காதலனிடம் விசாரணை நடத்தப்படும். தற்கொலைக்கான காரணம் முழு விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்’ என்றார்.

Related Stories: