×

யூரோ கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி காலிறுதியில் இங்கிலாந்து

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி, இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் ஸ்வீடனை வீழ்த்திய உக்ரைன் அணியும் காலிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. லண்டனில் நேற்று இரவு நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் வலுவான இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் மோதின. இரு அணிகளுமே சம பலத்துடன் ஆடியதால், ஆட்டத்தின் முதலாவது பாதியில் கோல் ஏதும் விழவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பலமுறை பந்தை கடத்தி சென்று, கோல் அடிக்க முயன்றனர். ஜெர்மனியின் கோல் கீப்பர் மானுவல் நியூயர், இங்கிலாந்தின் கோல் ஷாட்டுகளை தடுத்துக் கொண்டிருந்தார். இருப்பினும் ஜெர்மன் அணியின் வீரர்கள் பதற்றத்துடனேயே ஆடினர். ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஃபார்வர்ட் ரஹீம் ஸ்டெர்லிங், சக வீரரின் கிராஸ் ஷாட்டை வாங்கி, அற்புதமாக கோல் அடித்தார்.

தொடர்ந்து 86வது நிமிடத்தில் இங்கிலாந்தின் சென்டர் ஃபார்வர்ட் ஹாரி கேன், சற்று உயரம் குறைவாக பறந்து வந்த பந்தை, கிட்டத்தட்ட முழங்காலிட்டு, தலையால் முட்டி, தரமாக ஒரு கோல் அடித்தார். இறுதியில் இப்போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து காலிறுதியில் கால் பதித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த மற்றொரு 2ம் சுற்றுப் போட்டியில் உக்ரைன்-ஸ்வீடன் அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. உக்ரைன் அணி வீரர் ஒலெக்சான்ட் சின்சென்கோ மற்றும் ஸ்வீடனின் எமில் ஃபோர்ஸ்பெக் ஆகிய இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 121வது நிமிடத்தில் இடது ஓரத்தில் இருந்து சின்சென்கோ கோல் போஸ்ட்டை நோக்கி பறக்க விட்ட பந்தை, உக்ரைனின் முன்கள வீரர் ஆர்டெம் டோவ்பிக் தலையால் தட்டி கோல் அடித்தார். இதையடுத்து இப்போட்டியில் உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.


Tags : Euro Cup ,Germany ,England , Euro Cup Football: Germany exit England in the quarterfinals
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...