புதுக்கோட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலைய கிடங்கில் திடீர் தீ விபத்து: ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்

திருமயம்: புதுக்கோட்டை  அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிடங்கில் தீ பிடித்து எரிந்ததில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் மருத்துவமனைக்கு தேவையான மிஷினரி சாமான்கள், பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து, நாப்கின்கள் சேமித்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று காலை திடீரென புகை வருவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சேமிப்பு கிடங்கு அருகில் சென்று பார்த்தபோது தீ மளமளவென பரவி புகை மூட்டத்துடன் கட்டிடம் முழுவதும் எரிய தொடங்கியது.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்க்கும்போது கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து சாமான்களும் எரிந்து சாம்பலானது தெரியவந்தது. மேலும் சேதத்தின் மதிப்பு ரூ. 2 லட்சம் வரை இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அலுவலர்கள் மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>