பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு விரைவில் ஆய்வு: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தகவல்

பழநி: பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வுப் பணி துவங்க உள்ளதாக ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். பழநியில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்க வந்த ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பாதிப்பை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாட்டில் 2.07 கோடி குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் குடும்ப உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது அமைந்திருக்கும் ஆட்சி அனைத்துத் தரப்பு மக்களையும் காக்கும் என்ற எண்ணத்தை உறுதி செய்யும் வகையில் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கி உள்ளது. ஆயக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான குளிர்பதன கிடங்கு அமைப்பதற்காக தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

 பழநி ஊராட்சி ஒன்றிய பகுதி மற்றும் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் பழநி -  கொடைக்கானல் ரோப் கார் அமைப்பதற்கான திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை சரி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த இடர்பாடுகள் சரிசெய்யப்படக் கூடியதே என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததால்  திட்டம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுப்பணி துவங்க உள்ளது. கொடைக்கானலில் ஹெலிபேடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் கிளாவரையில் இருந்து கேரள பகுதிக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>