×

ஜம்மு-வில் மீண்டும் அந்நிய டிரோன் விமானங்கள் நடமாட்டம்!: நொடிப்பொழுதில் மறைந்துவிட்டதாக ராணுவம் தகவல்..பாதுகாப்பு தீவிரம்..!!

ஜம்மு: டிரோன்கள் மூலம் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களால் அடுத்தடுத்து ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை 2 டிரோன்களின் ஊடுருவலை ராணுவம் முறியடித்துள்ளது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் கடந்த ஞாயிறு அன்று வெடிபொருட்கள் நிரம்பிய டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். டிரோன் விமானம் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்பதால் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விமானப்படை தாக்குதல் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டிருப்பதை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்களன்று மீண்டும் 2 டிரோன் விமானங்கள் ரத்னசக் அருகே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதை அறிந்த ராணுவத்தினர் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து டிரோன்கள் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை ஜம்முவின் கல்லூச்சக், கஞ்ச்வானி ஆகிய பகுதிகளில் 2 டிரோன்கள் தென்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

டிரோன்களை தாக்க முற்பட்ட போது அவை நொடிப்பொழுதில் வேகமாக பறந்து மறைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரோன்களின் நடமாட்டம் மீண்டும் கண்டறியப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லை முழுவதும் நவீன கருவிகளின் துணையுடன் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Tags : Jammu , Jammu, drones, navigation, army
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...