×

தமிழகத்தின் 30வது காவல்துறை தலைவராக பொறுப்பேற்றார் சைலேந்திரபாபு : மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டுகோள்!!

சென்னை: தமிழகத்தின் 30வது புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றுக் கொண்டார். தமிழக டிஜிபியாக திரிபாதி உள்ளார். இவர், 2019ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு (ரயில்வே), கரன்சின்ஹா (தீயணைப்புத்துறை), சஞ்சய்குமார் (எல்லை பாதுகாப்பு படை) ஆகியோரது பெயர்களை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவர்களது பெயர்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பட்டியலில் உள்ளவர்களை பரிசீலித்த தமிழக அரசு, சைலேந்திரபாபுவை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று மாலை உத்தரவிட்டது. இவர், பதவி ஏற்ற நாள் முதல் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் 2022 ஜூன் மாதத்துடன் முடிகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதால், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவியில் நீடிப்பார்.

இதையடுத்து டிஜிபி அலுவலகம் சென்ற சைலேந்திரபாபு புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்ற அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவரிடம் பொறுப்புக்களை ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 30 நாட்களில் தீர்வு காணப்படும். தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அறிய சந்தர்ப்பம். தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.டிஜிபியாக அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும்.மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,என்றார்.


யார் அந்த புதிய டிஜிபி ?

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட சைலேந்திரபாபுவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். 1962ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்தார். இவர், எம்எஸ்சி(அக்ரி), எம்ஏ, பிஎச்டி முடித்துள்ளார். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர். 1987ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று ஆகஸ்ட் 31ம் தேதி பயிற்சியில் சேர்ந்தார்.

பின்னர் முதல் முறையாக கோபிச்செட்டிபாளையத்தில் கூடுதல் எஸ்பியாக பணியைத் தொடங்கினார். பின்னர் தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றியவர், 1992ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு எஸ்பியாகவும் பணியாற்றியவர் ஒரு ஆண்டு காத்திருப்போர் பட்டியலிலும் இருந்தார். பின்னர் தலைமையிட உதவி ஐஜியாக பணியாற்றியவர், ஈரோடு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியவர், சென்னை அடையாறு துணை கமிஷனராகவும் பணியாற்றினார்.

பின்னர் மீண்டும் ஈரோடு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டு வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் டிஐஜியாகவும், வடசென்னை, தென் சென்னை இணை கமிஷனர், திருச்சி சரக டிஐஜியாக பணியாற்றினார். பின்னர் 2006ம் ஆண்டு புகளூர் காகித ஆலை டிஐஜியாகவும்,  ஐஜியாகவும் பணியாற்றியவர் மீண்டும் ஈரோடு அதிரடிப்படை, கோவை கமிஷனர், வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றினார். பிறகு கடலோர பாதுகாப்பு குழுமம் ஏடிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மீண்டும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஏடிஜிபி, சிறைத்துறை,ரயில்வே போலீசி லும்  பணியாற்றியவர், டிஜிபி பதவி உயர்வு பெற்று ரயில்வே, சிவில் சப்ளை, தீயணைப்புத்துறைகளையும் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.



Tags : 30th Police Chief ,Tamil ,Nadu ,Silendrabu , சைலேந்திரபாபு
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...