×

ட்விட்டர் தளத்தில் சிறார்களின் ஆபாச படங்கள் அதிகம் பகிரப்படுவதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு!!


டெல்லி : ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் க்ரைம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டர் தளத்தில் சிறார்களின் ஆபாச படங்கள் அதிகம் பகிரப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்து இருந்தது. இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவின் உயர் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகவும் அந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது போக்ஸோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் டெல்லி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழந்த பின்னர் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது பதியப்படும் 4வது வழக்கு இதுவாகும். ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள புதிய தொழில்நுட்ப விதிகளை கடைப்பிடிக்க ட்விட்டர் நிறுவனம் மறுத்து வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் லோனி பகுதியில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து காஷ்மீர் லடாக்கை தவிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் இந்திய வரைப்படத்தை வெளியிட்டதற்காக ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அந்நிறுவனத்திற்கு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.


Tags : Twitter ,India , ஒன்றிய அரசு
× RELATED ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய...