பொள்ளாச்சி அருகே பயங்கரம்: 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த கார்- ஒருவர் பலி: நண்பர்கள் 3 பேர் காயம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே 40 அடி உயர ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விழுந்தது. இதில், தனியார் ஊழியர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். கோவை ராமநாதபுரத்தை  சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (34), தனியார் விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இவர், தனது நண்பர்களான கோவையை சேர்ந்த கவுசிக் (26), கார்த்திக்கண்ணன் (27), பொள்ளாச்சியை சேர்ந்த கோபிநாத் (26) ஆகியோருடன் நேற்று முன்தினம் பொள்ளாச்சிக்கு சொகுசு காரில் வந்தார். அங்கு, ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் ஒன்றாக, நள்ளிரவில் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் ரோட்டில்  காரில் ஜாலியாக சுற்றியுள்ளனர்.

 நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், வடக்கிபாளையம் ரோட்டில் இருந்து கோவை ரோட்டிற்கு வருவதற்காக காரை ஸ்ரீகாந்த் வேகமாக ஓட்டிள்ளார். வடக்கிபாளையம் பிரிவு ரயில்வே மேம்பாலத்தின் வளைவில்  அதிவேகமாக திரும்பும்போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக தெரிகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் ஓரம் தடுப்புச்சுவரில்  வேகமாக உரசியபடி சென்றது. அடுத்த சில விநாடிகளில் பாலத்திலிருந்து கார் தூக்கி வீசப்பட்டது. சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து, ஆ.சங்கம்பாளையம் காலனியில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முகசுந்தரம் என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் காம்பவுண்ட் சுவற்றை உடைத்துகொண்டு கீழே விழுந்து நொறுங்கியது.

கார் விழுந்ததில், அங்கிருந்த மின்கம்பம் இரண்டாக உடைந்தது. அந்நேரத்தில், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. கார் வேகமாக மோதி கீழே விழுந்ததில், இன்ஜின் தனியாக கழன்றது. காரை ஓட்டிய ஸ்ரீகாந்த், சீட் பெல்ட் போடாததால், கார்  விழுந்த வேகத்தில் ஏர் பலூன் திறக்கவில்லை. இதனால், அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கோபிநாத், கவுசிக், கார்த்திக்கண்ணன் ஆகியோர் சீல் பெல்ட் போட்டதுடன், ஏர் பலூனும் திறந்ததால் படுகாயத்துடன் தப்பினர். கார் விழுந்ததில் மின்துண்டிப்பு ஏற்பட்டதால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கார் விழுந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயன், எஸ்.ஐ.க்கள் சந்திரன், சகாயராஜ் மற்றும் போலீசார் விரைந்தனர். படுகாயம் அடைந்த கோபிநாத், கவுசிக், கார்த்திக்கண்ணன் ஆகியோரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்ரீகாந்த் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுக்கு நூறாக நொறுங்கிய கார், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இரவு நேரத்தில், சினிமாவை மிஞ்சும் அளவிற்கு வேகமாக விழுந்த காரால், அப்பகுதியில் விடிய  விடிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

குண்டு வெடித்த சத்தம்

மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்தது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில்,`அதிகாலை சுமார் 2 மணியளவில் நாங்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தோம். அப்போது, திடீரென குண்டு வெடித்ததுபோல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதியை இடித்துக்கொண்டு கார் தலைகீழாக விழுந்து கிடந்தது. அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காரில் இருந்தவர்களை, வெளியே எடுத்தோம். சினிமாவில்தான் இதுபோன்ற காட்சியை பார்த்துள்ளோம். ஆனால், இப்போது நேரில் கண்டுள்ளோம்’ என்றனர்.

Related Stories:

>